கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்தால் களைகட்டியது.
வருகின்ற 28ஆம் தேதி முஸ்லிம்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், ஆடுகள் வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகாலை முதலே சந்தைக்கு திரண்டனர்.
இன்று நடைபெற்ற சந்தைக்கு தியாகதுருகம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறியாடு, குறும்பாடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதிகாலை 5 மணிக்கே தொடங்கிய இந்த சந்தையில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த மொத்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
ஆடுகளின் இனம், எடை மற்றும் தரத்திற்கேற்ப ஒவ்வொரு ஆடும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானதாக கூறப்படுகிறது. கடந்த வாரங்களில் ரூ.50 லட்சம் அளவிலேயே வர்த்தகம் நடைபெற்ற நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று சந்தை தொடங்கிய 3 மணி நேரத்திலேயே ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டதுடன், கால்நடை வளர்ப்போரும் வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
பக்ரீத் பண்டிகையின் முக்கியத்துவம்
இஸ்லாமியர்களின் முக்கிய திருநாள்களில் ஒன்றான பக்ரீத் அல்லது ஈதுல் அத்ஹா, இறைநம்பிக்கை, தியாகம் மற்றும் பகிர்வு உணர்வை எடுத்துக்கூறும் பண்டிகையாகக் கருதப்படுகிறது. இறைவனின் கட்டளைக்காக தனது மகனைத் தியாகம் செய்யத் தயார் ஆன இப்ராஹிம் நபியின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது. இதனால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை அதிகரித்து வருகிறது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment